அமெரிக்கா இசை விழாவில் கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹுஸ்டன் நகரில் கடந்த 5-ம் தேதி பிரபல ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில் டிராவிஸ் ஸ்காட் பாடும்போது மேடை நோக்கி வந்த ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரசிகர்கள் இடையே பீதி ஏற்பட்டு அடித்து பிடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்ததுடன் 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில் நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த கிறிஸ்டியன் பாரடேஸ் என்ற வாலிபர் புகார் கொடுத்தார். அதன்படி பாடகர்கள் டிராவிஸ் ஸ்காட், டிரேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டிராவிஸ் ஸ்காட் மற்றும் அஸ்ட்ரோவேல்ட் ஆஸ்ட்ரோ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதாக மூத்த வழக்கறிஞர் பெண் கிரம்ப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஹுஸ்டன் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.