நெல், பருத்தி மற்றும் கரும்பு போன்றவை தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் நெல், பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் நடவு முடிந்து நன்கு வளர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல், மிளகாய், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.
இதனால் பூலாம்பட்டி, கூடகல், குப்பனூர், நெடுங்குளம், சித்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி மேற்கண்ட பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புடைய விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர் பயிர் செய்த மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்ககோரி எடப்பாடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.