பிரான்சில் காவல்துறை அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
பிரான்சில் உள்ள கெனிஸ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், காவல்துறையினர் சிலர் இன்று காலையில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி புறப்பட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினர் இருந்த வாகனத்தின் கதவை திறந்திருக்கிறார்.
அதன்பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் வாகனத்தின் முன் சீட்டில் இருந்த காவல்துறை அதிகாரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் அந்த அதிகாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு அருகில் இருந்த மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் கத்தியால் குத்த முயன்றிருக்கிறார்.
உடனடியாக மற்றொரு அதிகாரி விவேகமாக செயல்பட்டு, தன் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டதில் அவர் உயிரிழந்தார். அதன் பின்பு அந்த பகுதி முழுக்க அதிகமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நபர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காவல்துறை அதிகாரியை அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இத்தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.