2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.இதில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலத்தை வென்றார்.
இதன்மூலம் இந்திய வீரர்கள் சரத், மாரியப்பன் தங்கவேலு ஆகிய இருவரும் அடுத்தாண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.மாரியப்பப்பன் தங்கவேலு, 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதால் அவர் மீண்டும் தங்கம் வென்று சாதனைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இதுவரை இந்திய அணி இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் உள்ளிட்ட ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.