உதவுவது போல் நடித்து நகைகளை திருடிய பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 30-ஆம் தேதி வீராசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து அன்று இரவே வீராசாமிக்கு சிகிச்சை முடிந்து மகள் சங்கீதா அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி சங்கீதா தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 11 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் நகைகள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேகித்தது “வீராசாமி வீட்டில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தாமரைச்செல்வி மற்றும் 18 வயது உறவினர் ஒருவர் வாடகைக்கு குடியிருந்தனர். கடந்த 30-ஆம் தேதி வீராசாமி வீட்டிற்கு வந்த அவர்கள் 2 பேரும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது வீராசாமி மருவமனைக்கு செல்ல இருந்தது அவர்கள் 2 பேருக்கும் தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமரைச்செல்வி மற்றும் 18 வயது உறவினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தின்படி தனிப்படை காவல்துறையினர் தாமரைச்செல்வி மற்றும் 18 வயது உறவினர் ஆகியோரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் இருவரும் செட்டிமண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்களிடம் இருந்த நகைகளை விற்பனை செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தெரியவந்ததாவது “வீராசாமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது தாமரைச்செல்வி மற்றும் 18 வயது உறவினர் அங்கு சென்றனர்.
அதன்பின் 2 பேரும் வீராசாமிக்கு உதவுவதாக வீட்டை பூட்டுவது போல் நடித்து கதவை மட்டும் மூடி தாழிட்டு சாவியை சங்கீதாவிடம் கொடுத்தனர். இதனைதொடர்ந்து சங்கீதாவும், வீராசாமியும் அங்கிருந்து சென்றதும் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 36 பவுன் நகைகளை திருடிச் சென்றது” காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ] காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி தாமரைச்செல்வி மற்றும் உறவினர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 36 பவுன் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இவ்வாறு ஒரே நாளில் நகைகளை மீட்ட தனிப்படை காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.