கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள நகரமன்ற தலைவர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான மனுக்கள் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தம்பிதுரை, “தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏதுமில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமே வெற்றிடம் உள்ளது அதற்குத்தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட உள்ளன. தேவைப்படும்போது மேலோகத்தில் சென்று பார்த்தால் இங்கு வெற்றிடம் இருப்பது தெரிய வரும்.
திமுக தான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தில் சென்று தடையாணை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் காலதாமதம் ஏற்பட்டது.தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது முகஸ்டாலின் குற்றச்சாட்டுகள் கூறி வந்தநிலையில் அவருக்கு பதவி உயர்வு அளித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் குறித்த நடுக்கமும் ஏற்பட்டுள்ளது” என்று கடுமையாக சாடி பேசினார்.