காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி விமான எரிபொருளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் ETH Zurich என்ற ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சூரிய ஒளியையும் காற்றையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த எரிபொருளானது குறைவான அளவிலேயே சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கருவி ஒன்றின் உதவியால் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீரை சேமிக்கின்றனர். இந்த இரு மூலக்கூறுகளையும் சேகரித்து CO மற்றும் H2 என மாற்றமடைய செய்கின்றனர். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் CO மற்றும் H2வை கலக்கின்றனர். இந்த நிலையை syngas என்று அழைக்கின்றனர். இறுதியில் இந்த syngas கலவையை திரவ ஹைட்ரோகார்பன்களாக மாற்றுகின்றனர்.
இதன் பின்னர் எரிபொருளாக தயாரிக்கின்றனர். இருப்பினும் இந்த எரிபொருளானது தற்போதைக்கு குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கருவிகளில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி தொழில்துறை அமைப்பினர்களின் உதவியுடன் எப்பகுதியில் அதிகமாக சூரிய ஒளி கிடைக்கின்றதோ அங்கு வணிக ரீதியாக எரிபொருளைத் தயாரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.