மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு நான் பலியானேன். பயங்கரவாதம் என்னை பிடுங்கிக் கொண்டது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது.
நான் உயிருடன் இருப்பதால் உங்களுடன் இதனைப் பேசுகிறேன். இதயத்தை ரணமாக்கும் ஒரு சம்பவத்தை நான் கூறப்போகிறேன். அவர் பெயர் பி.கே. கஞ்ச். அவர் ஒரு பொறியாளர். பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது உடலை அரிசி மூட்டைக்குள் அடைத்தனர். அந்த அரிசி மூட்டையில் அவரது ரத்தம் படிந்திருந்தது. அந்த ரத்தம் தோய்ந்த அரிசியை, அவரது மனைவியை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினர். ஒரே நாள் இரவில் மட்டும் நான்கு லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினர்.
30 ஆண்டுகள் கழித்து காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமையை மீட்டெடுக்கும் இந்த நடவடிக்கையால் இந்திய குடிமக்களை போல, காஷ்மீரிகளுக்கும் உரிமை கிடைத்துள்ளது. இதனை எண்ணி நான் மகிழ்ச்சிக் கொள்கிறேன். மீதமுள்ள சில மாவட்டங்களையும் மீட்டெடுப்பது வெகு தொலைவில் இல்லை. இதனை நான் பாதுகாப்பானதாக உணர்கிறேன்.
நான் காஷ்மீரின் மகள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என் சமூகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ, ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.