2015 வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் மழை நீர் தேங்கியது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..
சென்னையில் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் தொடர்ச்சியாக 3 தினங்களாக இடைவிடாமல் பெய்த மழையால் அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மேலும் அடிப்படை தேவைகளுக்கு கூட வர முடியவில்லை என்று பொதுமக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் சாலையை அகலப்படுத்து தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஓன்று தொடரப்பட்டது.. அதாவது, சாலையை அகலப்படுத்தும் போது முறையான வசதி ஏற்படுத்தப்படவில்லை.. மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.. அதே போல கழிவுநீர் செல்வதற்குரிய வடிகால் செய்யவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, 2015 பெருவெள்ளத்தை சந்தித்தது போலவே சென்னை மீண்டும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 2015 வெள்ளத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் மழை நீர் தேங்கியது ஏன்?.. 2015இல் பெருவெள்ளம் ஏற்பட்ட பின் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.. இப்படி அடுக்கடுக்கான கேள்வியை சென்னை மாநகராட்சிக்கு எழுப்பி சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை எனில் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஐகோர்ட், இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளது.