தந்தை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி மெயின் ரோடு சினிமா தோட்டம் பகுதியில் பகத்சிங் மனைவி சசிகலா வசித்து வந்தார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் சசிகலாவை வீராணம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சசிகலா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் சசிகலா ஆயுள் தண்டனை பெற்று சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சசிகலா ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செவ்வாய்பேட்டை ராமசாமி தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சசிகலா வந்துள்ளார். அங்கு மிகுந்த மன வேதனையில் இருந்த சசிகலா கடந்த 2-ஆம் தேதி வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் “சசிகலா தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பெண் சசிகலாவிடம் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த சசிகலா தற்கொலை செய்திருக்கலாம்” என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.