முன்னாள் அமைச்சரின் முறைகேடு வழக்கில் பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பு வகித்தார். அப்போது அவர் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தி.மு.கவும் புகார் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்பொழுது இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளரான பொன்னி முதல்கட்ட விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் இவ்வழக்கை முடித்து வைக்குமாறு போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இதற்கிடையில் தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின் விசாரணை நடத்தப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட குற்றச் சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பனர்ஜி, நீதிபதி பி.டி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது முன்னாள் அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் கூறியதில் “முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் புகாருக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் நகலை எங்களுக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல் கூறியதில் “காவல் ஆய்வாளரின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஆவணமாக பயன்படுத்தினால் அதன் நகலை விசாரணை நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது அதனை வழங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் “முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை நடத்தி இன்னும் பத்து வாரங்களில் தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மனுதாரரின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டுள்ளதால் இவ்வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.