தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் குறுவை அறுவடை மற்றும் சம்பா தாளடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடபாதிமங்கலம் புனவாசல் தெருவில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி குட்டை ஒன்று இருக்கின்றது. இந்த குட்டையில் மழை தொடங்குவதற்கு முன் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது தொடர் மழையின் காரணமாக குட்டை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் புனவாசலில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவிலை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இவ்வாறு கூத்தாநல்லூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.