மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற்றது. அப்போது ஆணையாளர் கிறிஸ்துராஜ் இந்த முகாமிற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். இதில் ஓய்வூதியம், பணி நியமனம், சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையாளர் கிறிஸ்துராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதனையடுத்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் பேசியபோது “தற்போது பருவமழை காலமாக இருக்கிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ஆகவே மாநகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்காமலும், குடியிருப்புகளில் தண்ணீர் போகாமல் இருப்பதற்கு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அலுவலர்கள் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.