முதல்முறையாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு கழுதை புலிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் முதல்முறையாக கழுதைப் புலிகள் இரண்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக புலிகள், சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த உயிரியல் பூங்காவில் 23 வயதான கிபோ மற்றும் 22 வயதான கோஸி ஆகிய கழுதைப்புலிகள் இரண்டுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த கழுதைப்புலிகள் இரண்டுக்கும் அடிக்கடி சளி, இருமல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய கால்நடை சேவை ஆய்வகம் புலிகள் மற்றும் சிங்கங்களில் இருந்து கொரோனா தொற்று கழுதை புலிகளுக்கும் பரவியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் இதுவரை கொரோனாவால் இரண்டு புலிகள், 11 சிங்கங்கள், இரண்டு கழுதைப்புலிகள் உள்ளிட்டவை டென்வர் உயிரியல் பூங்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்த்ராக்ஸ், ரேபிஸ் உள்ளிட்ட பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து உயிர் வாழும் திறன் பெற்ற கழுதைப்புலிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வன உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கழுதைப்புலிகள் மற்ற பாதிப்பு எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.