முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் இருக்கும் இடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், “முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத்தயார். நிரூபிக்கத் தவறினால் ராமதாசும், அன்புமணியும் அரசியலைவிட்டு விலகுவார்களா?” எனக் கூறி முரசொலி நிலப் பட்டாவையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜக, அதிமுகவினர் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்துவந்தனர். இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி பாஜகவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின், வருகின்ற 19ஆம் தேதி நேரில் விசாரணைக்கு முன்னிலையாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. மேலும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நவ. 19ஆம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் உதயநிதியிடம் விசாரணை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.