அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் மைக்கேல் தாம்சன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு அலியா என்பவருடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, மணமகனின் தந்தை நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.இந்நிலையில், தாம்சன் – ஆலியா இருவரும் மணமகனின் தந்தையின் ஆசியுடனே திருமணம் நடைபெற வேண்டும் என முடிவு செய்து மணஇடத்தை மருத்துவமனைக்கு மாற்றினர்.
மருத்துவமனையில் இவர்களின் திருமணத்தை பாதிரியார் மணமகனின் தந்தையின் முன்னிலையில் நடத்தி வைத்தார். மேலும், மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் நீலநிற ஆடைகளை மணமக்கள் அணிந்துகொண்டு மோதிரங்களை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து, அலியா கூறுகையில்,”மைக்கேலின் தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதால், மருத்துவர்கள் அவரை வெளியில் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்பதால் அங்கேயே எங்களது திருமணத்தை நடத்திட முடிவு செய்து அவ்வாறு செய்தோம்” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து மைக்கேல் கூறுகையில்,” எங்களின் திருமணம் எனது தந்தையின் ஆசியோடு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது. பாதிரியார் மருத்துவமனைக்கே வருகை தந்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும், நீரிழிவு நோயாளிகளும் உண்ணும் பிரத்தியேக கேக்கினை மருத்துவமனை நிர்வாகம் தயாரித்து கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர் என்றார். தற்போது, இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.