பெல் நிறுவன ஊழியரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகுமரேசபுரம் பகுதியில் நாதமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாத தவணைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் கோனார் தெருவில் வசிக்கும் ராமதுரையின் மனைவி பூங்குழலி துணி வாங்கியுள்ளார். இதனால் பூங்குழலி 12 ஆயிரம் ரூபாய் சாந்திக்கு கடனாக கொடுக்க வேண்டியது இருந்தது.
இந்நிலையில் சாந்தி, பூங்குழலியிடம் தனக்கு தரவேண்டிய பணத்தை தரும்படி அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் பூங்குழலி அந்த பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பூங்குழலி தான் பணம் தருவதாக சாந்தியை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு பூங்குழலி சாந்து கரண்டியால் சாந்தியை தலையில் அடித்து தாக்கியதுடன், பாவாடையால் அவர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றார். மேலும் சாந்தி அணிந்திருந்த கம்மல், சங்கிலி போன்ற 5 பவுன் நகைகளையும் பூங்குழலி கொள்ளையடித்தார். இதனையடுத்து பூங்குழலி வீட்டின் பின் பகுதியில் தென்னை மரத்துக்கு தோண்டிய குழியில் சாந்தியின் உடலை போட்டதோடு, பழைய தார்பாயால் மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனிடையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சாந்தியை காணவில்லை என்று அவருடைய கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர். அதன்பின் 2 நாட்கள் கழித்து ராமதுரையின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சாந்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாந்தியை கொலை செய்தது பூங்குழலி தான் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்படி பூங்குழலியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். இந்நிலையில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் “குற்றம் சாட்டப்பட்ட பூங்குழலிக்கு சாந்தியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், நகைகளை திருடிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சாட்சிகளை அழிக்க முயன்ற குற்றத்திற்காக பூங்குழலிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதுமட்டுமின்றி இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவும்” நீதிபதி உத்தரவிட்டார்.