வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெள்ளை பாதிப்பால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனைப் போலவே பல மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மழை எச்சரிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மற்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 11ம் தேதியும் வட மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.