மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்றினர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மைசூருக்கு செல்லும் பர்கூர் மலைப்பாதை சாலையில் செட்டிநொடி, நெய்கரை போன்ற இடங்களில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 2 இடங்களில் தலா 100 டன் எடை கொண்ட பாறைகள் கிடந்ததால் அதனை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த பாறைகளை வெடி வைத்து உடைக்கப்பட்டு பின் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. இதன் காரணமாக 26 மணி நேரத்திற்கு பின் வாகன போக்குவரத்து தொடங்கியது. இது தொடர்பாக தகவலறிந்த வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பழனி தேவி, தாசில்தார் விஜயகுமார், தி.மு.க. செயலாளர் நல்லசிவம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நெய் கரை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த மரங்களை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.