சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.