முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பூவனூர் பகுதியில் விசுவநாதன் மகன் கலைமணி வசித்து வருகின்றார். இவருக்கும் பூவனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கலைமணி நீடாமங்கலம் வந்துவிட்டு பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் சிலர் கலைமணியை காரில் அழைத்துச்சென்று நீடாமங்கலம் ரயில் நிலைய பகுதியில் வைத்து அவரை கம்பியால் தாக்கினர்.
இதனால் காயமடைந்த கலைமணி மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கலைமணி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராமமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ராமமூர்த்தியின் அண்ணன் ராஜ்குமார், மனோஜ், அரவூரை சேர்ந்த சேனாதிபதி, பகலவன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.