வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதுவரை தமிழகத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், சென்னை, புதுச்சேரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு இன்றும், நாளையும் சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமே அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.