சுவிஸ் நாட்டை அச்சுறுத்தும் வகையில் புதிதாக தோல்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகளில் அதிகரித்து வரும் சிரங்கு நோய் காரணமாக அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த Scabies நோயானது பூச்சிகளால் பரவி வருவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட காலத்திற்கு முன் இந்த அரிப்பு நோய் ஐரோப்பாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் சுவிட்சர்லாந்தில் கிளினிக்குகள் மற்றும் தோல் மருத்துவமனைகளில் கடந்த பத்து வருடங்களில் சிரங்கு மற்றும் அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தோல் நோய் மற்றும் வெனிரியாலஜி SGDV-க்கான சுவிஸ் சொசைட்டி உறுப்பினரும், தோல் நோய்களுக்கான நிபுணருமான Bettina Schlagenhauff இடம்பெயர்வு மற்றும் உலகமயமாக்கல் காரணமாக சிரங்குகள் மற்றும் அரிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். அதேசமயம் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 30 வயது இளம்பெண் ஒருவர் மருந்துகள் எடுத்துக் கொண்ட பிறகும் அரிப்பு 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தோன்றியது என்று கூறியுள்ளார். மேலும் இந்த அரிப்பு நோய் காரணமாக தான் பல வேதனைகளை சந்தித்ததாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சுவிஸ் மருத்துவர்கள் அந்நாட்டு மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் 60 டிகிரி வெந்நீரில் உடைகளை துவைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.