தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை கைாரைக்காலுக்கும் – ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் 11 ம் தேதி காலை முதல் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களல் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கோவை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.