குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வடபாதிமங்கலத்தில் முடிதிருத்தும் பணி செய்து வருகின்றார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் மோகனுக்கு எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த சங்கீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் குழந்தையுடன் மோகன் வீட்டுக்கு வந்து தங்கினார். இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தார்கள் மோகனை அழைத்து பேசியதாக தெரிகிறது.
இவ்வாறு பஞ்சாயத்தார்கள் அழைத்து பேசியதால் மோகனுக்கு அவமானமாக இருந்தது. இதனால் நான் சாகப்போகிறேன் எனக்கூறி மோகன் கிளியனூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் 2 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் மோகன் கீழே இறங்கி வந்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மோகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.