சிறுத்தை தாக்கி விவசாயி பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கின்றது. இந்த வனச்சரகங்களில் பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஜிர்கள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்ரா என்பவர் வழக்கம்போல் தன்னுடைய நிலத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்து வந்த ஒரு சிறுத்தை திடீரென்று வீரபத்ராவை தாக்கியது. அவ்வேளையில் வீரபத்ரா தன் கையில் வைத்திருந்த கம்பால் சிறுத்தையை அடித்து விரட்டினார். எனினும் சிறுத்தை தாக்கியதில் வீரபத்ராவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வீரபத்ராவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.