முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:” முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் படியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தண்ணீர் 138 அடி தான் இருக்கவேண்டும். ஆனால் 29-ம் தேதி 138.75 அடி ஆக இருந்ததால் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது. அதுமட்டுமில்லாமல் பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என்று கோரி கேரள அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் உண்மை நிலவரம் அறியாமல் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.