தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது. அது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை வரை இடைவிடாமல் விடிய விடிய வெளுத்து வாங்குவதால் சாலைகள் நீரில் மூழ்கி சென்னை தனித்தீவு போல காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின.