குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நகரின் பல இடங்களில் கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து லேசான சாரல் மழை நீடித்தது. மேலும் இந்த நான்கு நாட்களாக சென்னைவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மழை நீரானது தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது வேளச்சேரி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, தண்டையார்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கொளத்தூர், கொரட்டூர், மந்தைவெளி, அசோக்நகர், சூளை, பட்டாளம், பெரவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதிலும் மக்களின் முழங்கால் அளவுக்கு மழை நீர் புகுந்துள்ளது.
இந்த பேரிடர் காரணமாக புரசைவாக்கம் தாணா தெரு, பெரம்பூர்-ஜமாலியா நெடுஞ்சாலை, வடபெரும்பாக்கம், மாதவரம் மண்டலம் திருமலை நகர் விரிவு 6-வது குறுக்கு தெரு, திரு.வி.க.தொகுதி கே.எம்.கார்டன் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பென்சினர்ஸ் 2 மற்றும் 3-வது தெருக்கள், சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது.
இதற்கிடையில் ஒருபக்கம் மாநகராட்சி, குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியம், தீயணைப்பு துறை ஆகியோர் மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் மழையும் பெய்து வருவதால் நீரை அகற்றும் பணியானது முழுமையாக செய்து முடிக்க முடியாமல் கடினமாக உள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் இருப்போர் பெரும்பாலும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் மக்கள் காய்கறி, பால், மளிகை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மழை நீரில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
இதனால் மக்களுக்கு சேற்றுப்புண் போன்ற பூஞ்சை நோய்களும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக மக்கள் இதனால் மிகுந்த குழப்பம் மற்றும் மன வேதனையில் உள்ளனர். இருப்பினும் குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தேங்கியுள்ள மழைநீரில் சிறுவர்கள், சிறுமிகள் ஆட்டம் போடுகின்றனர்.