தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் “வீடு கட்டுவதற்காக ராதாகிருஷ்ணன் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் ராதாகிருஷ்ணனுக்கு சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இந்நிலையில் கடனை உரிய நபரிடம் திருப்பி கொடுக்க முடியாமல் ராதாகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து உள்ளார்” என்று காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது. எனினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.