தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாரிகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் திடீரென சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி டிரைவரை சீருடை அணியாமல் இருந்தது ஏன்? என்று கேட்டு அதன் பிறகு ஓட்டுனர் உரிமத்தையும் கேட்டார். மேலும் அந்த ஓட்டுனரிடம் சீருடை அணிந்து உரிய போக்குவரத்து நடவடிக்கைகளை பின்பற்றி வாகனங்கள் இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், சீருடை அணியாமல் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் தனியார் பஸ் இயக்கிய டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அறிவுறுத்தினர்.