வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது: “குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும். அதி கனமழைக்கான வாய்ப்பு குறையும்.
இந்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் மெரினா, பட்டினம்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், காசிமேடு, எண்ணூர். திருவொற்றியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். இதனால் மக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டாக அங்கு செல்கின்றன. அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து விரட்டியுள்ளனர். காற்று வீசுவதால் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.