தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பின மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை வரை தொடர்ந்து பெய்து வந்தது.
இதனால் சாலையோர காய்கறி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் குடை பிடித்தவாறு அவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலக வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்களும் மழையின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் தொடர் மழையின் காரணமாக நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வாழப்பாடியில் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வெள்ளாளகுண்டம் கிராமத்தில் வசித்து வரும் செல்லக்குள்ளு (60) என்பவர் வீடு இடிந்து விழுந்து ஆடு ஒன்று உயிர் இழந்தது. மேலும் வாழப்பாடி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த கண்ணன் மனைவி மகேஸ்வரி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.அதன்பிறகு தகவலறிந்து வந்த தாசில்தார் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், சந்திரகேசவன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் மற்றும் பெரியசாமி ஆகியவர்கள் சேதமடைந்து வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.