வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதில் கும்பகோணம் அருகில் உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவில் கவுதமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு விஜயபிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அனன்யா, அஜிதா என்ற மகள்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மண்சுவரால் கட்டப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவரானது இடிந்து கவுதமன் மற்றும் அவரது 4 வயது மகள் அனன்யா ஆகியோர் மீது விழுந்தது. இதனால் கவுதமனும், அனன்யாவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அனன்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.