சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு வரை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். சென்னைக்கு அதி கனமழைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும், காற்று மற்றும் கனமழைக்காக கொடுக்கப்பட்ட அலர்ட் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் தரைக்காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துவரும் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
இந்த நிகழ்வு அடுத்து 2 மணி நேரத்துக்கு தொடரும். இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு வரை வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முபெய்யக்கூடும் என்று தெரிவித்தார். சென்னைக்கு அதி கனமழைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது. காற்று மற்றும் கனமழைக்கான அலர்ட் தொடர்வதாகவும் கூறினார்.