கல்லூரி மாணவரை குத்திக் கொலை செய்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையம் பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு காஞ்சனா தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிபிராஜ் என்ற மகன் இருந்தார். இதில் சிபிராஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து கொரோனா காரணமாக சிபிராஜ் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் நிறுவனத்துக்கு சென்று விட்டனர். இதனால் சிபிராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் சிபிராஜை அவரது தந்தை அருள்ராஜ் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் என்று வந்ததால் சந்தேகமடைந்த அருள்ராஜ் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு சிபிராஜ் கழுத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அருள்ராஜ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிபிராஜின் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிபிராஜை யாரோ மர்ம நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
ஆனால் சிபிராஜை கொலை செய்தவர் யார் என்பது குறித்து மர்மமாக இருக்கிறது. அதன்பின் சிபிராஜின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சிபிராஜை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.