Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாமனார் செய்த செயல்…. கல்லூரி பேராசிரியை அளித்த புகார் மனு…. கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் மற்றும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் பாஸ்கரன் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெஞ்சமின் டேவிட் சத்தியநாதன் என்ற மகன் உள்ளார். இவர் தற்போது சேரன்மகாதேவியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெஞ்சமின் டேவிட் சத்தியநாதனின் மனைவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது எனது பெற்றோர் 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணம், சீர்வரிசை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை கொடுத்தனர்.

அப்போது எனது கணவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். இதனால் எனது கணவர் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். இதற்கிடையே எனது மாமனார் பாஸ்கரன் ஜோசப் எனக்கு செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகவல் ஆகியவற்றை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து நான் எனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும் எனது கணவர் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று என்னை மிரட்டினார். இதற்கிடையே எனது மாமனாரின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது எனது கணவரின் குடும்பத்தினர் என் குடும்பத்தினரிடம் எனது நகைகளை ஒப்படைத்தனர்.

தற்போது நான் எனது தந்தையுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் எனது கணவருடன் சேர்த்து வைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எனது மாமனார், மாமியார் சாந்தினி ஆகியோர் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரன் ஜோசப் மற்றும் பெஞ்சமின் டேவிட் சத்தியநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சாந்தினியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |