வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் ,சாலைகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உச்சிப்புளி, கடுக்காய் வலசை, மானாங்குடி, இரட்டையூரணி பகுதிகளில் கனமழை பெய்து வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். மேலும் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடந்த 3 நாட்களாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ராமேஸ்வரம், மண்டபம் போன்ற பகுதிகளில் மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.