மாவோயிஸ்ட்கள் மீது கேரள தண்டர்போல்ட் (Thunderbolt) படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு, மாவோயிஸ்ட்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்த் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள வனப்பகுதியிலுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை காவல் துறையினரும் உறுதி செய்தனர். மேலும், பழங்குடியினரும் கருலாய் வரயன் வனப்பகுதியில் ஆயுதமேந்திய நான்கு பேரைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்களின் நினைவுநாள் நவம்பர் 24ஆம் தேதி வரவுள்ளதால் நிலம்பூர், வந்தூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட என்கவுன்டருக்குப் பின், 100க்கும் மேற்பட்ட தண்டர்போல்ட் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டும் இதே கருலாய் வரயன் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் காணப்பட்டது.