நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
பின்னர் பெண்ணிற்கு மற்றொரு இளைஞருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். தொடர்ந்து சுரேஷ்குமார் திருமணத்தை நிறுத்தி விடுவார் என எண்ணி அவர் மீது பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்காக சுரேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதால் அவரை பெண் வீட்டார் தான் கொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டி, சுரேஷின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து தங்களது மகனை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்த நிகழ்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.