செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்த போதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகு சரி எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ அதை கண்டறிந்து, அந்த பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. குறிப்பாக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி, தமிழக அரசு நிதி, மாநகராட்சி நிதி இதைக்கொண்டு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக 1,385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு, கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வசதி, 406 கிலோமீட்டருக்கு செய்து முடிக்கப்பட்ட அரசு அம்மாவுடைய அரசு. இதனால் தான் அந்த பகுதியில் கனமழை பெய்தும் கூட தண்ணீர் தேங்காமல் இப்போது இருக்கின்றது.
அதை போல பக்கிங்காம் கால்வாய் முடியும் எண்ணூறும் முகத்துவாரத்தில் அடைப்பு இருந்தது, மழைநீர் விரைவாக கடலில் கலக்க முடியாமல் வட சென்னை முழுவதும் தாழ்வான பகுதியில் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் தேங்கி இருந்தது. அம்மாவின் அரசு எண்ணூர் முகத்துவாரத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு முகத்துவாரம் முழுவதும் வட்டார் மாஸ்டர் என்ற நவீன இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு தற்போது மழை காலங்களில் வெள்ள நீர் எளிதாக கடலை அடைவதால், முந்திய காலங்களில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த வடசென்னை, பெரும்பாலான பகுதி இன்று தண்ணீர் தேங்காமல் உள்ளதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
இதெல்லாம் மாண்புமிகு அம்மா அரசு செய்த காரணத்தினால் தான் இன்றைக்கு இவ்வளவு கனமழை பெய்தும் இந்த வடசென்னை பகுதியில் சில பகுதியை தவிர்த்து மற்ற மழைநீர் வடிகால் வசதி மூலமாக தண்ணீர் தேங்காமல் அகற்றப்பட்டு இருக்கின்றது.வில்லிவாக்கம் ஏரி சுமார் 18 கோடி ரூபாயில் சுமார் சிட்டி திட்டத்தின் மூலமாக தூர்வாரப்பட்டு செய்யப்பட்டு இன்றைக்கு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபயிற்சி, பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை திட்டமிட்டு தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது, வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் அம்மாவின் அரசால் தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் 80 கோடி ரூபா செலவில் மாமாக்கம் கால்வாயை சீரமைத்து மற்றும் கரையோர வடிகால் பணிகள் முடிந்துள்ளது. கொசத்தலை பகுதியில் 3,220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் 869 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கத் திட்டமிட்டு, இதில் 90 கிலோமீட்டர் நீளத்திற்கு 250 கோடி ரூபாயில் பணிகள் முடிந்துள்ளன, மீதமுள்ள பணிகள் இந்த அரசு விரைவில் துவங்கி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கோவளம் பகுதியில் 1714 கோடி ரூபாயில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது பசுமை தீர்ப்பாயம் தடை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். இன்னும் நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக வடிகால் வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் செய்த காரணத்தினால் தான் இவ்வளவு கன மழை பெய்தும் கூட அந்தந்த பகுதி எல்லாம் இன்றைக்கு மழை நீர் இல்லாமல் பார்க்க முடியாமல் இருக்கிறது.