வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை பெய்யத் தொடங்கிய கனமழை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்தது. அதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தது.சென்னை மட்டுமல்லாமல் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று சென்னை அருகே தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
இந்நிலையில் நாளை வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அந்தமான் அருகே உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரத்தின்படி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை மற்றும் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இந்த சூழலில் இன்னொரு புயல் சின்னத்தைத் சென்னை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.