பாகிஸ்தான் அரசு மிரட்டலுக்கு பணிந்து பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து ரிஸ்வி பெயரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” எனப்படும் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி மீது தீவிரவாத தாக்குதல், நூற்றுக்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே பஞ்சாப் மாகாண அரசு ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி-ஐ பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ரிஸ்வி பெயரை நீக்க வேண்டும் என்றும், ரிஸ்வியை விடுதலை செய்யும்படியும், லப்பைக் மீதான தடையை நீக்கக் கோரியும் அந்த பயங்கரவாத அமைப்பினர் பாகிஸ்தான் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தினை கண்டு திணறிய பாகிஸ்தான் அரசு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் லப்பைக் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதையடுத்து அந்த பயங்கரவாத அமைப்பின் மீதான தடை கடந்த 7-ஆம் தேதி அன்று நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரிஸ்வி பெயர் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நேற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.