கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில் தண்டவாள பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது “சடலமாக கிடந்தவர் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை அருகே வசித்து வந்த குழந்தைவேலு என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த நிலையில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ குழந்தைவேலு முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து உடலை புதரில் வீசி சென்றது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் குழந்தைவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் குழந்தைவேலு சடலமாக கிடந்த பகுதியில் தண்டவாளத்தின் மறுபுறம் அவரது வேட்டி, சட்டை கிடந்தது. அந்த வேட்டி, சட்டையில் ரத்தக் கறைகள் ஏதும் இல்லாததால் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைவேலு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கொலை தொடர்பாக குழந்தைவேலுவுடன் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.