மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி, மெட்ரோ சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இருப்பினும் சென்னையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. பல பகுதிகளில் நீர் வடியாததால் பல லட்சக்கணக்கான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகரின் சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
குடிநீ,ர் பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் காலம் தவறிய மழையால் நெல் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் தான் அவர்கள் இழப்பை ஈடுசெய்ய முடியும். ஆனால் தற்போது கனமழை அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக அரசு பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது. அமைச்சர் குழுவினர் ஆய்வுகளை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னையிலு,ம் பிற பகுதிகளிலும் பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.