தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள இசவன்குளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பகவதி(38) முத்துலட்சுமி(18) என்ற மகள் மற்றும் மாடசாமி(16) என்ற மகனும் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரை மழையின் காரணமாக சேதமடைந்திருந்தது.
இந்நிலையில் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் சுடலை சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சுடலையை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த சுடலை குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கட்டிட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.