திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததன் காரணமாக மே மாதத்தில் தேர்தல் நடைபெறவில்லை.
பின்னர் வேலூரில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மகன் துரைமுருகன் மீண்டும் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி. சண்முகத்தை விட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி கண்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்வேலூர் மக்களவை உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்றுக் கொண்டார். தமிழில் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட அவர், மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். கதிர் ஆனந்த் வெற்றியின் மூலம் மக்களவையில் தமிழ்நாடு திமுக கூட்டணியின் பலம் 38ஆக உயர்ந்துள்ளது.