டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் செல்வம் மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திகேயன், சர்வேஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் வேனில் கார்த்திகேயன், சர்வேஷ் உள்ளிட்ட சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது மாவட்ட நிர்வாகம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததால் காலை 9.45 மணிக்கு சிறுவர்கள் அதே வேனில் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வேனில் இருந்து இறங்கிய கார்த்திகேயனும், சர்வேஷும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வேன் டிரைவர் சிறுவர்களை அவர்களது வீடு இருக்கும் பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்.
அந்த சமயம் சர்வேஷ் சாலையை கடந்ததால் செட்டிபாளையம் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சர்வேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி ஓட்டுநரான பரமேஸ்வரன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.