தாய் மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புக்கசாகரம் கிராமத்தில் லாரி ஓட்டுநரான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், சுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வெங்கடலட்சுமி மதுமிதாவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பிறகு வெங்கட லட்சுமியும் விஷம் கலந்த உணவினை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மதுமிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் வெங்கட லட்சுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஷம் கலந்த உணவை சாப்பிடுவதற்காக வெங்கடலட்சுமி அழைத்த போது சுதீப் சாப்பாடு வேண்டாம் எனக்கூறி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் சிறுவன் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. எனவே காவல் துறையினர் வெங்கடலட்சுமி மீது கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.