காண்டிராக்டரிடம் இருந்து 10 லட்ச ரூபாயை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் கட்டிட காண்டிராக்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணியை செய்து முடித்ததற்காக ராஜாவிற்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என ராஜா தனது நண்பரான மனோகரன் என்பவரிடம் கூறியுள்ளார். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கினால் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க முடியும் என மனோகரன் தெரிவித்துள்ளார்.
அதற்கு ராஜா சம்மதம் தெரிவித்ததால் ராகுல் என்பவரின் செல்போன் எண்ணை மனோகரன் ராஜாவிற்கு கொடுத்துள்ளார். அதன் பின் ராகுல் உட்பட 5 பேர் இணைந்து ராஜாவை காரில் கடத்தி சென்று அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராகுல் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.